
தொடர்ந்து 4-வது நாளாக நிதியமைச்சர் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
நிலக்கரி, பாதுகாப்பு, விண்வெளி, மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட 8 துறைகளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக நாட்டின் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. இதனை சரி செய்யும் விதமாக ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான 'தற்சார்பு இந்தியா' திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 3 நாட்களாக விளக்கம் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். இன்று 4-வது நாளாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
1. நிலக்கரி துறையை மேம்படுத்த ரூ. 50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இறக்குமதியை குறைத்து உற்பத்தியை அதிகரிக்க திட்ட மிட்டுள்ளோம். வர்த்தக நோக்கத்தில் நிலக்கரித்துறையில் தனியாரின் பங்களிப்பும் இருக்கும்.
2. ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றன. முதற்கட்டமாக 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும். 500 கனிமச் சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலத்திற்கு விடப்படும்.
3. அலுமினிய உற்பத்தியை ஊக்கப்படுத்த பாக்சைட் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் ஒன்றாக ஏலத்திற்கு விடப்படும். சுரங்கத்றையை மேம்படுத்த நவீன தொழில் நுட்பங்கள் கொண்டு வரப்படும். மீத்தேன் வாயு திட்டத்திலும் தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
4. ராணுவ தளவாட உற்பத்தி துறையில் தன்னிறைவு எட்டப்படும். இதற்காக மேக் இன் இந்தியா திட்டம் பயன்படுத்தப்படும். குறிப்பிட்ட ராணுவ தளவாடங்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டு, அவை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு உதிரி பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
5. ஆயுத உற்பத்தி துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 49 சதவீதமாக இருந்த அன்னிய நேரடி முதலீடு 74 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவனங்களாக மாற்றி அமைக்கப்படும். இது தனியார் மயமாக்கும் நடவடிக்கை அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
6. சீர்திருத்தங்கள் மூலமாக விமானங்களை இயக்குவதற்கான செலவில் ரூ. 1,000 கோடி வரை மிச்சப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வான் பரப்பில் இருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, வான் எல்லையை சுதந்திரமாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.
7. விமான போக்குவரத்தில் தனியார் முதலீடுகளால் முதல்கட்டமாக இந்திய விமான கழகத்திற்கு ரூ. 2,300 கோடி கிடைக்கும். விமான நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான பணிகள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
8. மத்திய யூனியன் பிரதேசங்களில் செயல்படும் மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். அவற்றை திறன் மிக்கதாக மாற்றும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
9. மருத்துவமனைகளை அமைப்பதற்கான மானியம் 30 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது. விண்வெளித்துறையிலும் தனியாரின் பங்களிப்பை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்ரோவின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அதன் கட்டமைப்பு வசதிகளை தனியார் பயன்படுத்திக் கொள்ளலாம். செயற்கைகோள் தயாரிப்பு, அதனை ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் பங்களிப்பு செய்யும். விண்வெளிப் பயணம், விண்வெளி ஆய்வு உள்ளிட்டவற்றையும் தனியார் மேற்கொள்ளலாம்.
10. புற்று நோய் உள்ளிட்ட முக்கிய நோய்களை குணப்படுத்துவதில் கதிரியக்கத் தனிமங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்கத் தனிமைங்களை தயாரிப்பதில் தனியார் பங்களிப்பு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.